குரு பூர்ணிமா
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பாரதத்தின் சமய பாரம்பரியத்தில் ஒரு முக்கிய, தனித்துவமிக்க இடம் பெற்றவராகத் திகழ்ந்தார். வேத காலத்திலிருந்து பக்தி தத்துவம் பல சிறந்த மகான்கள் அறிந்து பின்பற்றிய ஒன்று. ஆயினும் ஸ்ரீ சைதன்யரே பக்தி மார்கத்திற்கு ஒரு முக்கிய இடத்தை அளித்தவர். அதற்கு தனிப்பட்ட மகத்துவத்தை அளித்து ஆன்மிக தத்துவத்தை முழுமையாகவும் ஆக்கியவரும் அவரே. அவர் இறைவனிடத்தான தூய அன்பை பக்தி மார்க்கத்தின் மற்ற அம்சங்களிலிருந்து பிரித்து போதித்தார். எல்லாவற்றையும் இறைவனாக ஏற்கும் ஒரு கருணைமிகு பாதையாக பக்தி மார்க்கத்தை மாற்றியவரும் அவரே!!! அப்பேர்பட்ட சைதன்யருக்கு பிறகு அவரைப் போல அவருக்கு இணையான மகானாக விளங்கும் ஒருவருக்காக உலகம் பல காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு தோன்றியவரே மாமனித உருவில் பக்தியை உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இது ஒன்றே இருவருக்கும் இடையேயான பொதுவான அம்சம் என்று கூறிவிட முடியாது. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் மகாபிரபுவின் அருமையையும் லீலைகளைப் பற்றியும் மிக விரிவாக அறிய முடிகிறது. சைதன்யரைப் பற்றி அவர் கூறாத அத்திய...