ராம நவமி
பாற்கடலில் வாசம் செய்யும் பரந்தாமன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களிலேயே கருணையும் கனிவும் நிரம்பியவர் தசரத மைந்தன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே என்றால் அது மிகையாகாது. சக மனிதர்களிடத்து மட்டுமின்றி அனைத்து உயிரினத்திடமும் கரிசனம் மிக்க மனிதராக அவதரித்தவர் ராகவ ராமன். தன் தந்தையின் கட்டளையை ஏற்று சித்திரகூடம் என்னும் வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார் ராமர். ஓர் நாள் தனது துணைவி சீதையோடு கோதாவரி நதியில் நீராட சென்று கொண்டிருந்த சமயம் வழியில் கிடந்த முள் சீதையின் பாதத்தில் தைக்க மேலும் நடக்க இயலாமல் அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்துவிட்டாள். "எருக்களைப் பூவிலிருந்து வடியும் பாலை ஊற்றினால் முள் தானாகவே வெளி வந்துவிடும். இங்கேயே அமர்ந்திரு...வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு அச்செடியைத் தேடி விரைந்தார் ராமர். சிறிது நேரத்தில் அச்செடி அவர் கண்களில் படவே அதனருகே சென்றவர் சக மனிதனைப் போல் அதனிடத்தே அன்போடு பேசினார். பாசத்தோடு தடவிக் கொடுத்தார். பின் தனக்கு நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறி அதன் மலர்களைக் கொய்ய அனுமதி கோரினார். அச்செடியும்...