அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

"நானே கடவுள் என்னை அன்றி யார் பெயரையும் உச்சரிக்க கூட அனுமதி இல்லை" என்று மூன்று உலகங்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த இரண்யகசிபுவிற்கு மகனாகப் பிறந்த பிரஹலாதன் ஹரியைத் தவிர வேறொரு நாமத்தை தனது நா கூறாது என்று உறுதியுடன் இருந்து தனது உயிரையும் துறக்க தயாராக இருந்தான். "எங்கே உந்தன் நாராயணன்" என்று தந்தை வினவ " எங்கும் வியாபித்திருக்கும் பரந்தாமன் இந்த தூணிலும் இருப்பான்..எந்த துரும்பிலும் இருப்பான்" என்று கூறிய மைந்தன் முன் இரண்யகசிபு தூணை சுக்கு நூறாக உடைக்க அதிலிருந்து தோன்றிய நரசிம்மன் அவ்வரக்கனின் நெஞ்சைக் கிழித்து அவனின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த கதை. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மரின் ஆவேசம் அங்கு சாந்தமடையவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறிய சிங்கமுகன் அருகிலிருந்த காட்டில் புகுந்து துவம்சம் செய்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த பழங்குடி மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பயத்தில் மறைந்து வாழத் துவங்கினர். காலங்கள் கடந்தது. தனது அவதாரத்தின் பலன் நிறைவடைந்த பிறகும் விஷ்ணு வைகுண்டம் திரும்பவ...