வராஹ ரூபம் தெய்வ வரிஷ்டம்

பாற்கடல் வாசனின் பத்து அவதாரங்களில் மூன்றாவது வராஹ அவதாரம். ஹிரண்யாக்ஷனிடம் இருந்து பூமாதேவியை காக்கும் பொருட்டு ஒற்றைப் பல் கொண்ட காட்டுப்பன்றி வடிவில் தோன்றினார் மஹாவிஷ்ணு. அசுர வேந்தன் மாபலியின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு வாமனனாக அவதரித்து இரண்டடிகளில் இப்பிரபஞ்சத்தையும் விண்ணுலகையும் அளந்து தனது மூன்றாவது அடிக்கு நிலம் கோரி நின்ற திரிவிக்கிரமன் பரந்தாமனின் ஐந்தாவது அவதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வாமன அவதாரம் உருவத்தில் பெரியவரா? வராஹ அவதாரமா? தனது உருவத்தை பன் மடங்கு பெருக்கி மூன்றாவது அடிக்கு இடமில்லாது இருந்த வாமனன் தானே என்று நமக்குத் தோன்றுவதில் விந்தை ஒன்றுமில்லை ஆனால் வராஹ அவதாரமே உருவத்தில் உயர்ந்தது..எப்படி..பார்ப்போமா!!! பிரளய காலத்தில் ஈரேழு பதினான்கு லோகங்களையும் சமுத்திரம் மூட தனது கொடும் ஆட்சியால் பூலோக வாசிகளை வதைத்துக் கொண்டிருந்த ஹிரண்யாக்ஷன் இந்த புவியையே ஒரு பந்து போல கையில் எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். பூமாதேவியின் துயர் நீக்க காட்டுப்பன்றி உருவம் கொண்டு அவதரித்த அச்சுதன் கடலை இரண்டாக்கப் பிளந்து உள் சென்று பூமியை த...