திருப்பரங்குன்றம் சிறப்பு
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றென்ற பெருமையைப் பெற்றது, இத் தலத்திற்கென்று பல சிறப்புக்களும் பெருமைகளும் உண்டு அவற்றில் பலருக்கும் தெரியாத, பரவலாக அறியப்படாத தகவல்களைக் காண்போமா? 1. தாரகாசுரனை வெல்வதற்கு சென்ற தேவர்களின் படைக்கு சேனாதிபதியாக தலைமை தாங்கி வெற்றியை தேடித் தந்தவர் முருகப் பெருமான். இதில் அகமகிழ்ந்த தேவர்களின் அரசன் இந்திரன் தனது மகள் தேவசேனையை சரவணனுக்கு மணமுடிக்க விருப்பம் தெரிவிக்க அவர்களின் திருமணம் நடந்தது மதுரை திருப்பரங்குன்றத்தில் தான். மும் மூர்த்திகளும் முப்பது முக்கோடி தேவர்களும் கலந்து கொண்ட இத்திருமணவிழாவில் அனைவருக்கும் கல்யாண விருந்தை வழங்கும் வண்ணம் இத்தலத்திற்கு வந்தார் அன்னபூரணி. கற்பகிரகத்திற்கு செல்லும் வழியில் அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. தென்னகத்திலேயே மிகவும் பழைமை வாய்ந்த அன்னப்பூரணி ஆலயங்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2. ஞானத்தை வேண்டி நாம் தியானிக்கும் கடவுள் தட்சிணாமூர்த்தி. அனைத்து ஆலயங்களிலும் அவரின் சிற்பத்தை க...