ஆயுத பூஜை சிறப்புக் கட்டுரை
கொரோனா என்னும் அரக்கனை அழிக்கும் ஆயுதம் (தடுப்பு ஊசி ) இன்னும் அறியப்படாத இந்நிலையில் அசுரர்களை அழிக்கவும் அநீதியை வெல்லவும் தெய்வங்கள் கைகளில் ஏந்திய ஆயுதங்களைப் பற்றி காண்போம். தேவ சிற்பி விஸ்வகர்மா ஓர் மரப்பட்டையை இரண்டாக்கப் பிளந்து உருவாக்கிய இரட்டை வில் சிவ தனுசு மற்றும் விஷ்ணு தனுசு என்று அறியப்படுகிறது. அதில் முதலில் சிவ தனுசுவைப் பற்றி காண்போம். சிவ தனுசு (திரிபுரம் எரித்தல்) முன்னொரு காலத்தில் மூன்று அசுர சகோதரர்கள் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தனர் அவர்களின் தவம் கனிந்து அவர்கள் முன் தோன்றிய பிரம்மாவிடம் சாகா வரம் வேண்ட அவரோ அவர்களை சிவனை நோக்கி தவம் புரியுமாறு பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த மகேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி வேண்டிய வரங்களை கேட்குமாறு பணிக்க சகோதரர்கள் "தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று பறக்கும் மாளிகைகளை பெற்றனர் முடிவில் இறப்பின்மை வேண்டும்" என்று வேண்ட சிவனோ "இப்புவியில் பிறந்த அனைவரும் மடிய வேண்டும் என்பது நியதி ஆதலால் தாங்கள் எப்போது, யார் கையால...